2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பணிகளை சென்னை அணி வீரர்களுடன் தோனி துவங்கியுள்ளார்.
2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது.
அதன்படி, வரும் மார்ச் 22ம் திகதி மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், குஜராத்தின் சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் சென்னை அணி, அதன் 2022 ஐபிஎல் தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனி, லால்பாய் மைதானத்தில் உள்ள சென்னை அணி வீரர்களுடன் இணைந்து, 2022 ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளார்.
முன்னும் பின்னும் பைகளை மாட்டிக்கொண்டு, சிஎஸ்கே ஜெர்சியில் முகக் கவசம் அணிந்து கையை அசைத்த படி தோனி மைதானத்திற்குள் நுழையும் புகைப்படத்தை சென்னை அணி, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை அணி, 2022 ஐபிஎல் தொடரிலும் வெற்றிப்பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.