ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர தர்மரத்னவின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றை விட்டுச் சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (26) பிற்பகல் தனது வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு முன்னால் வெடிகுண்டு இருப்பதாக அவர் ஹெட்டிபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு சென்று வெடிகுண்டை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடத் தயார் என்று இவர் அறிவித்துள்ள நிலையில், மனமுடைந்த யாரோ தன்னை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என அவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.