புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது.
மேலும் பிரேசிலில் 88 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டதோடு இத் தொற்று 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்திவைத்தன.
எனினும், புதிய வகை கொரோனா 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அதேபோல், தென் ஆபிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளதோடு பிரித்தானிய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பிரேஸில் நீட்டித்துள்ளது.