சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் தேசிய நோய் தொற்று அறிவியல் மையம் ஆகியவை இணைந்து சென்னை மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்றன.
இதற்காக ஏற்கெனவே மூன்று கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ளன. கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 28 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 36 சதவீதம் பேரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். கடந்த டிசம்பரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 29 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 35 சதவீதமாகவும் அதிகரித்தது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 21 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 27 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நான்காம் கட்ட ஆய்வில், குடிசைப் பகுதிகளில் முகக்கவசம் அணிந்துகொள்வோர் எண்ணிக்கை 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் அதிவேகமாக தொற்று குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

